
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஜிம்பாப்வே அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அபிஷேக் சர்மா, ரியான் பராக் மற்றும் துருவ் ஜுரெல் உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.
இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணிக்கு வெஸ்லி மதவெரே மற்றும் இன்னசெண்ட் கையா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இன்னசெண்ட் கையா முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரையன் பென்னெட் 23 ரன்களுக்கும், மற்றொரு தொடக்க வீரரான வெஸ்லி மதவெரே 21 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
இதனால் ஜிம்பாப்வே அணியானது 51 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த கேப்டன் சிக்கந்தர் ரஸா மற்றும் தியான் மேயர்ஸ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் தனது முதல் பந்திலேயே ஜிம்பாப்வே தொடக்க வீரர் இன்னசெண்ட் கையாவை க்ளீன் போல்டாக்கினார்.