
உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 284 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. ஆஃப்கானிஸ்தான் அணி சார்பாக குர்பாஸ் 57 பந்துகளில் 4 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 80 ரன்களும், இக்ரம் 58 ரன்களும் சேர்த்தனர்.
இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் பேர்ஸ்டோவை ஆஃப்கான் அணியின் ஃபரூக்கி 2 ரன்களில் வெளியேற்றினார். தொடர்ந்து வந்த இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஜோ ரூட் முஜீப் உர் ரஹ்மான் பந்தில் வெறும் 11 ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 33 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான மலான் 32 ரன்களில் வெளியேறினார்.
இதனால் 4ஆவது விக்கெட்டுக்கு ஹாரி ஃபுரூக் - பட்லர் கூட்டணி இணைந்தது. தொடக்கம் முதலே விக்கெட்டை காப்பாற்ற பட்லர் நிதானமாக விளையாடினார். அதேபோல் பட்லர் வந்தபின் உடனடியாக ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷீத் கான் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். ஒரு பக்கம் அபாரமான லைன் மற்றும் லெந்தில் வீசி நவீன் உல் ஹக் பட்லரை கூடுதலாக அச்சுறுத்தினார். இதனால் பொறுமை இழந்த பட்லர், ரன்கள் சேர்க்க தீவிரமாக இருந்தார்.