
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை அடத்தின. செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சாமி தேசிய மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து விண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது தொடக்கத்திலேயே பிராண்டன் கிங்கின் விக்கெட்டை இழந்தாலும், அடுத்து களமிறங்கிய வீரர்களின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிக்ஸர் மழை பொழிந்தனர். அதிலும் குறிப்பாக அணியின் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 6 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 98 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
அவருக்கு துணையாக விளையாடிய ஜான்சன் சார்லஸ் 43 ரன்களையும், ஷாய் ஹோப் 25 ரன்களையும், கேப்டன் ரோவ்மன் பாவெல் 26 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்களைக் குவித்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய குல்பதீன் நைப் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.