
பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான சிபிஎல் லீக் போட்டி இன்று பார்படாஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பார்படாஸ் ராயல்ஸ் அணியானது தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் அந்த அணி கேப்டன் ரோவ்மன் பாவெல் அதிரடியாக விளையாடியதன் மூலம், 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோவ்மன் பாவேல் 59 ரன்களையும், குயின்டன் டி காக் 39 ரன்களையும் சேர்த்தனர். நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் வாக்கம் சலாம்கெயில் 3 விக்கெட்டுகளையும், அகீல் ஹொசைன், சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதன்பின் எளிய இலக்கை நோக்கி விளையாடிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.
மேற்கொண்டு அணியின் நட்சத்திர வீரர்கள் பாரிஸ், நிக்கோலஸ் பூரன் ஆகியோர் தலா 35 ரன்களையும், கேசி கார்டி 32 ரன்களையும் சேர்த்த நிலையில், கீரன் பொல்லார்ட், ஆண்ட்ரிஸ் கௌஸ், சுனில் நரைன், ஜேசன் ராய் உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இறுதியில் அகீல் ஹொசைன் 20 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்த நிலையில், டெரன்ஸ் ஹிண்ட்ஸ் சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.