
பிக் பேஷ் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 32ஆவது லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளென் மேக்ஸ்வெல் அரைசதம் கடந்து அசத்தியதுடன், இறுதிவரை களத்தில் இருந்து 4 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் என 90 ரன்களை சேர்த்தார். இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி வீரர்களும் தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தனர்.
அதிலும் அணியின் நட்சத்திர வீரர்கள் ஜோஷ் பிரௌன், மார்கஸ் ஹாரிஸ், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், ஜேக்கப் பெத்தல், டிம் செய்ஃபெர்ட், கேப்டன் வில் சதர்லேண்ட் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மார்க் ஸ்டெக்கிடி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.