
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் நட்சத்திர வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் இலங்கை அணியானது 113 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த கேப்டன் தனஞ்செயா டி சில்வா - அறிமுக வீரர் மிலன் ரத்நாயக்க இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர்.
அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தனஞ்செயா டி சில்வா 74 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 72 ரன்களையும் எடுத்திருந்த அறிமுக வீரர் மிலன் ரத்நாயக்காவும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் இலங்கை அணியானது முதல் இன்னிங்ஸில் 236 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.