
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிஎஸ்கேவை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சாம் கரண் 88 ரன்களையும், டெவால்ட் பிரீவிஸ் 32 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய யுஸ்வேந்திர சஹால் ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர் பிரப்ஷிம்ரன் சிங் 54 ரன்களையும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 72 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தாலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது. இந்த தோல்வியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்த முதல் அணியாகவும் வெளியேறியது.