
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 40ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இன்றைய போட்டிக்கான டெல்லி அணியில் டேவிட் வார்னர், லலித் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டிருந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் - பிரித்வி ஷா இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடும் முயற்சியில் பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசினர். இதையடுத்து இன்னிங்ஸின் 4ஆவது ஓவரை சந்தீப் வாரியம் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை ஃபிரேசர் மெக்குர்க் சிக்ஸர் அடிக்க முயற்சித்து தூக்கி அடித்தார்.
ஆனால் பந்தில் அவர் எதிர்பார்த்த அளவு வேகம் இல்லாத காரணத்தால் அது நேரடியாக நூர் அஹ்மத் கைகளில் தஞ்சமடைந்தது. இதனால் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 23 ரன்கள் சேர்த்த நிலையில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின் அந்த ஓவரின் 5ஆவது பந்தில் பிரித்வி ஷாவும் சிக்ஸர் அடிக்க முயற்சித்த நிலையில், பந்தை சரியாக டைமிங் செய்ய தவறினார்.