
பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடைபெற்றது. சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரப்ஷிம்ரன் சிங், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், மார்கஸ் ஸ்டொய்னிஸ், நேஹால் வதேரே, கிளென் மேக்ஸ்வெல் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த பிரியான்ஷ் ஆர்யா மற்றும் ஷஷாங்க் சிங் இணை பொறுப்புடன் விளையாடியதோடு, அடுத்தடுத்து பவுண்டரிகளையும் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரியான்ஷ் ஆர்யா 39 பந்துகளில் சதமடித்ததுடன், 7 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என 103 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த ஷஷாங்க் சிங் 52 ரன்களையும், மார்கோ ஜான்சென் 34 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 219 ரன்களைக் குவித்தது.