
இங்கிலாந்து - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று பர்மிங்ஹாமில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது.
இருப்பினும் இந்திய அணி ஏற்கெனவே மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றதன் காரணமாக 3-2 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது. மேலும் இப்போட்டியில் இங்கிலாந்தின் சார்லீ டீன் ஆட்டநாயகி விருதையும், இந்திய அணியின் ஸ்ரீ சாரனி தொடர்நாயகி விருதையும் வென்றனர். இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வீராங்கனை ராதா யாதவ் பிடித்த அபாரமான கேட்ச் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அதன்படி இன்னிங்ஸின் 20ஆவது ஓவரை இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டி வீசிய நிலையில், ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட ஏமி ஜோன்ஸ் ஸ்லாக் ஸ்வீப் ஷாட்டை அடிக்க முயன்றார். அப்போது டீப் மிட் விக்கெட் திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ராதா யாதவ் அபாரமான கேட்சைப் பிடித்து ஏமி ஜோன்ஸின் விக்கெட்டை வீழ்த்தினார். இந்நிலையில் ராதா யாதவ் பிடித்த இந்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.