
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 24ஆவது லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி கிறிஸ் லின் மற்றும் அலெக்ஸ் ரோஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக கிறிஸ் லின் 49 ரன்களையும், அலெக்ஸ் ரோஸ் 47 ரன்களையும் சேர்த்தனர். ஹோபர்ட் தரப்பில் வக்கார் சலாம்கெயில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியில் மிட்செல் ஓவன் 37 ரன்களையும், மேத்யூ வேட் 27 ரன்களையும் சேர்த்த நிலையில் அடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப், பென் மெக்டர்மோட் உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் இணைந்த நிகில் சௌத்ரி மற்றும் டிம் டேவிட் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் டேவிட் அரைசதம் கடந்து அசத்தியதுடன் 62 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி வெற்றிபெற்று அசத்தியது.