
தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது வெற்றி பெற்றதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 15 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியளின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியதுடன், பிளே ஆஃப் வாய்ப்பையும் ஏறத்தாழ உறுதிசெய்துள்ளது. அதேசமயம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது அடுத்தடுத்த தோல்விகளின் காரணமாக 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் 6ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் மீண்டும் ஒருமுறை பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதிலும் குறிப்பாக அவர் விக்கெட்டை இழந்த நிகழ்வு பெரும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. அதன்படி இன்னிங்ஸின் 8ஆவது ஓவரை அஸ்மதுல்லா ஒமர்ஸாய் வீசிய நிலையில் ஓவரின் 5ஆவது பந்தை ரிஷப் பந்த் பவுண்டரி அடிக்கு முயற்சியில் இறங்கி வந்து விளையாடினார்.