
ஐபிஎல் தொடரில் நேற்று அஹ்மதாபாத்தில் நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அனி 6 ரன்கள் வித்தியாசத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்நிலையில் இத்தோல்விக்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா மீது பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
அதிலும் நேற்றைய போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா களமிறங்கியது முதலே, ரசிகர்கள் பாண்டியாவை குறிவைத்து வசைபாட தொடங்கினார். மேலும், முன்னாள் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். இதனால் டாஸின் போதே ஹர்திக் பாண்டியா தனது சொந்த ரசிகர்கள் முன்பே அவமானமடைந்தார்.
அதனைத்தொடர்ந்து மும்பை அணி பந்துவீச்சை தேர்வுசெய்து விளையாடிய போது, ஹர்திக் பாண்டியா தனது அதிகார தோரணையில் ரோஹித் சர்மாவிடம் நடந்து கொண்டது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதிலும் அணியின் மூத்த வீரரை இப்படி நடத்துவதா என்ற கேள்விகளும் ஹர்திக் பாண்டியா முன் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போட்டி முடிந்து ரோஹித் சர்மா கோபமாக ஹர்திக் பாண்டியாவிடம் பேசும் காணொளி வைரலாகி வருகிறது.