
ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரின் கேட்ச்சை பிடித்ததன் மூலம் முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனியை இந்திய ரசிகர்களுக்கு நினைவூட்டினார்.
உண்மையில், இந்தப் போட்டியில், சஞ்சு விக்கெட்டுக்குப் பின்னால் ஜோஸ் பட்லரின் அற்புதமான கேட்சை பிடித்து அவரை ஆட்டமிழக்கச் செய்தார். இது மட்டுமல்லாமல், இந்த நேரத்தில் சஞ்சு நடுவரின் முடிவை தவறாக நிரூபித்து தனது அணிக்கு ஒரு பெரிய வெற்றியைக் கொடுத்தார். இந்த முழு சம்பவமும் இங்கிலாந்து இன்னிங்ஸின் 9ஆவது ஓவரில் நடந்தது. அந்தவகையில் அந்த ஓவரை இந்திய அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி வீசினார்.
அப்போது அந்த ஓவரின் கடைசி பந்தை லெக் ஸ்டம்புக்கு வெளியே வீசிய நிலையில் அதனை எதிர்கொண்ட ஜோஸ் பட்லர் ரிவர்ஸ் ஸ்வீப் மூலம் பவுண்டரி அடிக்க முயற்சித்தார். ஆனால் பந்து அவர் எதிர்பார்த்ததை விட வேகமாக வந்த காரணத்தால் பந்தை அவரால் சரியாக அடிக்க முடியவில்லை. அதனால் பந்து அவரது கையுரையின் மேல் லேசாக உராசி ஸ்டம்பிற்கு பின்னால் இருந்த சஞ்சு சாம்சன் கைகளில் தஞ்சமடைந்தது.