
ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான 5ஆவது டி20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய அபிஷேக் சர்மா 14 ரன்னிலும், ஷுப்மன் கில் 13 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இந்திய அணி 43 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் - ரியான் பராக் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரியான் பராக் 22 ரன்னில் விக்கெட்டை இழக்க, நிதானமாக விளையாடிய சஞ்சு சாம்சன் அரைசதம் கடந்த கையோடு 58 ரன்களிலும், ஷிவம் தூபே 26 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களைக் குவித்தது.
இதனையடுத்து 168 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் தியான் மேயர்ஸ் 34 ரன்களை அடித்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்கவில்லை. இதனால் ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.