
Shamar Joseph Video: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று பார்படாஸில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் 59 ரன்களையும், உஸ்மான் காவாஜா 47 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்பாடுத்திய ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஷமார் ஜோசப் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர்கள் கிரேய்க் பிராத்வைட் 4 ரன்னிலும், ஜான் காம்பெல் 7 ரன்னிலும், கேசி கார்டி 20 ரன்னிலும், ஜோமல் வாரிக்கன் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர்.