
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 396 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 209 ரன்களைச் சேர்த்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ரெஹான் அஹ்மத், சோயப் பஷீர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பென் டக்கெட் 21 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸாக் கிரௌலி அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸாக் கிரௌலி 11 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 76 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.