
அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் நடந்து முடிந்த முதல் இரண்டு போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி கேப்டன் பால் ஸ்டிர்லிங் மற்றும் ஹாரி டெக்டர் ஆகியோரது அரைசதங்கள் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 284 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் பால் ஸ்டிர்லிங் 88 ரன்களும், ஹாரி டெக்டர் 60 ரன்களையும் சேர்த்தார். தென்ஆப்பிரிக்கா தரப்பில் லிசாத் வில்லியம்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி தொடக்கத்திலேயே ரியான் ரிக்கெல்டன் 4 ரன்னிலும், ஹென்ரிக்ஸ் 1 ரன்னிலும், வான் டெர் டுஸ்சன் 3 ரன்னிலும் வெளியேறினார். அதன்பின் தென்ஆப்பிரிக்கா அணியால் சரிவில் இருந்து மீள முடியவில்லை. இதில் ஜேசன் ஸ்மித் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடியதுடன் 91 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.