
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணியானது தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் நடைபெற்ற முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியானது வெற்றிபெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தின் மூலமாக சரிலிருந்து மீண்டெழுந்தது. இதில் அபாரமாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்தனர்.
அதன்பின் 60 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் 30 ரன்களையும், ஆரோன் ஹார்டி 44 ரன்களையும் சேர்த்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த அலெக்ஸ் கேரி 77 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்களைச் சேர்த்தது.