
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதிச்சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கியுள்ளன. இதில் இன்று நடைபெற்று வரும் மூன்றாவது காலிறுதி ஆட்டத்தில் மும்பை மற்றும் ஹரியானா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ஆயூஷ் மத்ரே இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஆகாஷ் ஆனந்த் 10 ரன்களுக்கும், சித்தேஷ் லாட் 4 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஆஜிங்கியா ரஹானே ஒருபக்கம் நிதானம் காட்ட, மறுமுனையில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 9, ஷிவம் தூபே 28 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
இதையடுத்து அஜிங்கியா ரஹானேவுடன் இணைந்துள்ள ஷம்ஸ் முலானி விக்கெட் இழப்பை தடுத்து வருகின்றார். இந்நிலையில் இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 9 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் சுமித் குமார் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். சமீப காலங்களில் சூர்யகுமார் யாதவ் மோசமான ஃபார்ம் தொடர்ந்து வருகிறது.