
மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்றைய தினம் மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அங்கிரிஷ் ரகுவன்ஷி 26 ரன்களையும், ரமந்தீப் சிங் 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 16.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் அறிமுக வீரர் அஷ்வானி குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா 13 ரன்களிலும், வில் ஜேக்ஸ் 16 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரியான் ரிக்கெல்டன் 62 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 27 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.