
பரபரப்பாக நடைபெற்று வரும் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆடவர் கிரிக்கெட் பிரிவில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்று பதக்கத்தை உறுதி செய்தது. சீனாவின் ஹங்கொழு நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 20 ஓவரில் 96/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக ஜாகீர் அலி 24 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர்கள் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளும் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்களும் எடுத்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தனர். அதைத்தொடர்ந்து 97 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆரம்பத்திலேயே டவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
இருப்பினும் அடுத்து வந்து வங்கதேச பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கிய இளம் வீரர் திலக் வர்மா 2 பவுண்டரி 6 சிக்ஸருடன் 55 ரன்கள் விளாசினார். அவருடன் மறுபுறம் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடிய கேப்டன் ருதுராஜ் கைக்வாட் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 40 ரன்கள் எடுத்து 9.2 ஓவரிலேயே இந்தியாவை எளிதாக வெற்றி பெற வைத்தார். இதை தொடர்ந்து நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வெல்வதற்காக இந்தியா தயாராகியுள்ளது.