
பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மழை காரணமாக 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்ற நிலையில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணியின் பேட்டர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர். அதிலும் குறிப்பாக அந்த அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் டேவிட் அரைசதம் கடந்தது 50 ரன்களையும், அணியின் கேப்டன் ராஜத் படிதார் 23 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து ஒற்றையிலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதன்மூலம் ஆர்சிபி அணி 14 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களைச் சேர்த்தது. பஞ்சாப் அணி தரப்பில் மார்கோ ஜான்சென், யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்பிரீத் பிரார் உள்ளிட்டோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் டிம் டேவிட் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் ஐபிஎல் தொடரில் தனது முதல் அரை சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார்.