
இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வரும் ஜூலை 1ஆம் தேதியன்று கடந்த வருடம் ரத்து செய்யப்பட்ட 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் இந்தியா களமிறங்குகிறது. கடந்த வருடம் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை சொந்த மண்ணில் மிரட்டிய விராட் கோலி தலைமையிலான இந்தியா 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
எனவே தற்போது நடைபெறும் அந்த தொடரின் கடைசி போட்டியில் வென்று 15 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல இந்தியா தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக லீசெஸ்டர்ஷைர் கவுண்டி அணிக்கு எதிராக 4 நாட்கள் பயிற்சிப் போட்டியில் இந்தியா விளையாடி வருகிறது.
ஜூன் 23இல் துவங்கிய அப்போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பந்த், பிரஷித் கிருஷ்ணா மற்றும் சட்டேஸ்வர் புஜாரா ஆகிய 4 இந்திய வீரர்கள் லீசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடிய நிலையில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து தனது பேட்டிங்கை துவக்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 246/8 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.