
டெஸ்ட் போட்டிகளையும் - விராட் கோலியின் சண்டையையும் பிரிக்கவே முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. அவரின் ஆக்ரோஷங்கள், வார்த்தைகள், பேட்டிங்கால் பதிலடி கொடுப்பது போன்றவை வங்கதேச அணியுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் நீடித்து வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் - சிராஜ் ஆகியோருக்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் விராட் கோலி உள்ளே நுழைந்து பதிலடி கொடுத்தார். அவரின் செயல்பாடு இணையத்தில் தீயாய் பரவியது.
இந்நிலையில் தற்போது விராட் கோலிக்கே நேரடியாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் 12 ரன்களுக்குள் வெளியேறியதால், விராட் கோலி களமிறங்கி நிதானமாக விளையாடினார். 22 பந்துகளை சந்தித்து வெறும் ஒரு ரன்னை மட்டுமே எடுத்திருந்த அவர், மெஹிதி ஹாசன் மிராஸ் பந்துவீச்சில் துரதிஷ்டவசமாக அவுட்டானார்.
கோலி அவுட்டானவுடன் வங்கதேச பவுலர் தைஜுல் இஸ்லாம், அவர் குறித்து ஏதோ கிண்டலடிக்கும் வகையில் கூறினார். இதனைக்கேட்டு ஆத்திரமடைந்த விராட் கோலி, தைஜுல் இஸ்லாமிடம் நெருங்கி எதுவாக இருந்தாலும் முகத்திற்கு நேராக சொல் பார்க்கலாம் என கடுமையான வார்த்தைகளில் கூறினார். இதனையடுத்து உள்ளே வந்த வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மற்றும் நடுவர்கள் உள்ளே வந்து சமாதானப்படுத்தினர்.