
ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இந்திய அணி இரண்டாவது சுற்றில் தனது இரண்டாவது போட்டியில் இலங்கை அணியை வென்று, இறுதிப் போட்டிக்கான தகுதியைப் பெற்றுவிட்டது. அதேசமயத்தில் வங்கதேச அணி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்து விட்டது. எனவே இன்றைய போட்டி ஆசியக் கோப்பை தொடரில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
இந்த காரணத்தினால் இன்றைய இந்திய அணியில் 5 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது. விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, பும்ரா, சிராஜ், குல்தீப் யாதவ் என ஐந்து வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஓய்வு கொடுக்கப்பட்ட இந்த ஐந்து வீரர்களுக்கு பதிலாக ஷர்துல் தாகூர், பிரஷித் கிருஷ்ணா, முகமது ஷமி, சூர்யகுமார் ஆகியோர் இடம் பெற, திலக் வர்மா முதல்முறையாக இந்திய ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு பெற்று அறிமுகம் ஆனார்.
மேலும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். மேலும் இந்த போட்டியில் விராட் கோலிக்கு நிச்சயம் ஓய்வு தரப்படாது என்று பல முன்னாள் வீரர்களும் கூறி வந்தார்கள். ஏனென்றால் அவருடைய உடல் தகுதிக்கு ஓய்வு தேவைப்படாது, அவர் தொடர்ச்சியாக விளையாடிக் கொண்டிருப்பது அணிக்கு நல்லது என்று கூறப்பட்டது.