
இந்தியா மாஸ்டர்ஸ் - வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐஎம்எல் டி20 தொடரின் இறுதிப்போட்டி நேற்று ராய்ப்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் லிண்டல் சிம்மன்ஸ் அரைசதம் கடந்ததுடன் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 57 ரன்களையும், டுவைன் ஸ்மித் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 45 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் வினய் குமார் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய மாஸ்டர்ஸ் அணியில் தொடக்க வீரர் அம்பத்தி ராயுடு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 74 ரன்களையும், சச்சின் டெண்டுல்கர் 25 ரன்களையும் சேர்க்க, இந்தியா மாஸ்டர்ஸ் அணி 17.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன் சாம்பியன் பட்டத்தையும் வென்றது.