
சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 2025 தொடரானது நேற்று நவி மும்பையில் தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் இலங்கை மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா மாஸ்டர்ஸ் அணி ஸ்டூவர்ட் பின்னி மற்றும் யூசுப் பதானின் அரைசதங்கள் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஸ்டூவர்ட் பின்னி 3 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 68 ரன்களையும், யூசுப் பதான் 3 பாவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 56 ரன்களையும் குவித்து அணிக்கு தேவையான ஸ்கோரை கொண்டு வந்தனர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை மாஸ்டர்ஸ் அணியில் கேப்டன் குமார் சங்கக்காரா 8 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 51 ரன்களையும், ஜீவன் மெண்டிஸ் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 42 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்களைச் சேர்த்தது. இதன்மூலம், இந்தியா மாஸ்டர்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை மாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.