
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா மாஸ்டர்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய யுவராஜ் சின் அரைசதம் கடந்ததுடன் 59 ரன்களையும், சச்சின் டெண்டுல்கர் 42 ரன்களையும். ஸ்டூவர்ட் பின்னி 36 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் இந்திய மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 220 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலியா தரப்பில் தோஹர்த்தி, கிறிஸ்டியன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணியில் நட்சத்திர வீரர்கள் ரன்களைச் சேர்க்க முடியாமல் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக பென் கட்டின் 39 ரன்களை எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்கத் தவறினர். இதனால் ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணி 18.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்களில் ஆல் அவுட்டானது.