
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து மகளிர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் பிப்பா ஸ்ப்ரொல் ஒரு ரன்னிலும், மரியம் ஃபைசல் 4 ரன்னிலும், சரா பிரைஸ் 4 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் களமிறங்கிய கேப்டன் கேத்ரின் பிரைஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய ஐல்சா லிஸ்டர் 27 ரன்களையும், மேகன் மெக்கால் 15 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கேத்ரின் ஃபிரேசரும் 33 ரன்களை எடுத்த கையோடு நடையைக் கட்டினார்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த கேத்ரின் பிரைஸ் சதமடித்து அசத்தினார். மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேத்ரின் பிரைஸ் 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 131 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் ஸ்காட்லாந்து மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்களைச் சேர்த்தது. அயர்லாந்து அணி தரப்பில் எவ கன்னிங் 3 விக்கெட்டுகளையும், காரா முரே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.