
முன்னாள் வீரர்கள் பங்கேற்றுள்ள லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரானது இன்று கோலாகலமாக தொடங்கியது. அதன்படி இன்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணியை எதிர்த்தி இந்திய சாம்பியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய சாம்பியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் கெவின் பீட்டர்சன் - பில் மஸ்டர்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கெவின் பீட்டர்சன் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மஸ்டர்டும் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ரவி போபாராவும் 10 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதன் காரணமாக இங்கிலாந்து அணியும் 60 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் இணைந்த இயன் பெல் - சமித் படேல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், 4ஆவது விக்கெட்டிற்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சமித் படேல் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.