
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா சாம்பியன்ஸ் அணிக்கு ராபின் உத்தப்பா மற்றும் ஷிகர் தவான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ராபின் உத்தப்பா 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்களுக்கு அவுட்டான நிலையில் அடுத்து களமிறங்கிய அம்பத்தி ராயுடு ரன்கள் ஏதுமின்றியும், சுரேஷ் ரெய்னா 11 ரன்களிலும், கேப்டன் யுவராஜ் சிங் 3 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதற்கிடையில் ஷிகர் தவான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்த யூசுப் பதானும் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிகர் தவான் 92 ரன்களையும், யூசுஃப் பதான் 52 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் இந்தியா சாம்பியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்களைக் குவித்தது.