
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் கேப்டன் கிறிஸ் கெயில் 9 ரன்களிலும், லிண்டல் சிம்மன்ஸ் 2 ரன்னிலும், வால்டன் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய டுவைன் ஸ்மித், பெர்கின்ஸ் மற்றும் டுவைன் பிராவோ உள்ளிட்டோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அந்த அணி 43 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து களமிறங்கிய கீரன் பொல்லார்ட் ஒருமுனையில் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 3 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 74 ரன்களைச் சேர்த்தார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறியதன் காரணமாக அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் பியூஷ் சாவ்லா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.