
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் அணி தற்சமயம் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் இந்திய மகளிர் அணியானது நேற்றைய தினம் வெஸ்ட் இண்டீஸ் மகளீர் அணியுடன் பயிற்சி போட்டியில் விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷஃபாலி வர்மா 7 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் ஒரு ரன்னுடன் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்மிதிருதி மந்தனாவும் 14 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார்.
இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் யஷ்திகா பாட்டியா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் 24 ரன்கள் எடுத்த நிலையில் யஷ்திகா பாட்டியாவும், 7 ரன்களில் ரிச்சா கோஷும் தங்கள் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். மேற்கொண்டு 52 ரன்களைக் கடந்து விளையாடி வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸும் தனது விக்கெட்டை இழந்தார்.