Advertisement

நாங்கள் 20 ரன்கள் குறைவாக அடித்ததே தோல்விக்கு காரணம் - கேஎல் ராகுல்!

நானோ அல்லது தீபக் ஹூடாவோ 20 ரன்கள் வரை கூடுதலாக எடுத்திருந்தால் அணியின் எண்ணிக்கை 220 ரன்களைத் தாண்டி இருக்கும். அந்த 20 ரன்கள்தான் தற்போது எங்களுக்கு சற்று பின்னடைவை தந்தது என லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 28, 2024 • 12:25 PM
நாங்கள் 20 ரன்கள் குறைவாக அடித்ததே தோல்விக்கு காரணம் - கேஎல் ராகுல்!
நாங்கள் 20 ரன்கள் குறைவாக அடித்ததே தோல்விக்கு காரணம் - கேஎல் ராகுல்! (Image Source: Google)
Advertisement

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் கேஎல் ராகுல் 76 ரன்களையும், தீபக் ஹூடா 50 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பட்லர் 34, யஷஸ்வி 24, ரியான் பராக் 14 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தாலும் அதன்பின் இணைந்த கேப்டன் சஞ்சு சாம்சன், துருவ் ஜூரெல் இணை அபாரமாக விளையாடியதுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

Trending


இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சஞ்சு சாம்சன் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 71 ரன்களையும், துருவ் ஜூரெல் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 52 ரன்களையும் சேர்த்தனர். இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 புள்ளிகளைப் பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை எட்டியுள்ளது.

இந்நிலையில் இத்தோல்வி குறித்து பேசிய லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல், “இந்த போட்டியில் நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் என நினைக்கிறேன். இதில் நாங்கள் எதிர்பார்த்த தொடக்கம் எங்ளுக்கு கிடைக்கவில்லை என்றாலும், நானூம் ஹூடாவும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தது சிறப்பாக இருந்தது. இது போன்ற போட்டியில் ஒரு பேட்டர் 50-60 ரன்களை கடந்த பின்னர் சதத்தை நோக்கி சென்றிருக்க வேண்டும்.

மேலும் நாங்கள் பேட்டிங்கின் போது 15 ஓவர்களில் 150 ரன்கள் வரை சென்றிருந்தால் அடுத்த ஐந்து ஓவர்களில் இன்னும் கூடுதலாக ரன்களை சேர்த்திருக்க வேண்டும். இப்போதெல்லாம் எந்த அணி அதிக சிக்சர்களை அடிக்கிறதோ அந்த அணியே வெற்றி பெறுகிறது. எனவே இந்த போட்டியில் நாங்கள் அதிக சிக்சர்களை அடிக்க முயற்சித்து இருக்க வேண்டும். ஆனால் தொடக்கத்திலேயே நாங்கள் இரண்டு விக்கெட்டை இழந்ததால் எங்கள் நிலை பாட்டை மாற்றி விளையாட வேண்டி இருந்தது.

நானோ அல்லது தீபக் ஹூடாவோ 20 ரன்கள் வரை கூடுதலாக எடுத்திருந்தால் அணியின் எண்ணிக்கை 220 ரன்களைத் தாண்டி இருக்கும். அந்த 20 ரன்கள்தான் தற்போது எங்களுக்கு சற்று பின்னடைவை தந்தது. இந்த சீசனில் பந்து வீச்சாளர்கள் அழுத்ததில் இருப்பதால் அவர்களுக்கு கூடுதல் குஷன் கொடுப்பது எவ்வளவு முக்கியம் என்பதை ஒவ்வொரு ஆட்டத்திலும் நாம் பார்க்கிறோம்.

மேலும் அனைவரும் மைதானத்தில் அனைத்து திசைகளிலும் சிக்ஸர்களை அடிப்பதையே விரும்புகின்றனர். நாங்களும் அதனையே செய்ய விரும்பினோம். மேலும் அதற்காக நாங்கள் எங்களை தொடர்ந்து தயார்படுத்தியும் வந்தோம். அதற்கு ஏற்றவகையில் எங்கள் அணியில் மார்கஸ் ஸ்டொய்னி மற்றும் நிக்கோலஸ் பூரன் போன்ற பெரிய ஹிட்டர்கள் உள்ளனர். ஆனால் இன்று அவர்கள் விரைவில் ஆட்டமிழந்ததால் சற்று பின்னடைவு ஏற்பட்டது.

இன்றைய போட்டியில் நாங்கள் அமித் மிஸ்ரா மற்றும் ரவி பிஷ்னோயை பயன்படுத்துவது குறித்து நிறைய ஆலோசனை மேற்கொண்டோம். அமித் மிஸ்ரா ஒரு அனுபவமிக்க வீரர், அவர் தனது வேரியேஷன் மற்றும் பெரிய எல்லைகளை பயன்படுத்தி சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்த்தோம். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் ரன்கள் வர தொடங்கியதும் எதிரணி எங்கள் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தத்தை கொடுக்க தொடங்கினர். 

ஆனாலும் குர்னால் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு ரன்களை கட்டுப்படுத்த தொடங்கியதும், அவர்கள் எங்கள் வேகப்பந்துவீச்சாளர்களை குறிவைத்து அடித்து ஆட ஆரம்பித்துவிட்டனர். அதனால் எனக்கு ரவி பிஷ்னோயை பந்துவீச அழைக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒருவேளை ரோவ்மன் அல்லது ஹெட்மையர் களத்தில் இருந்திருந்தால் அவருக்கு பந்துவீச வாய்ப்பளித்திருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement