
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் குரூப் ஏ பிரிவில் இருந்து இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுவதை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.
அதேசமயம் இப்போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ள நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணியானது நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் லீக் சுற்றுடன் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியானது அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்ததன் காரண்மாக ஒட்டுமொத்த அணியின் மீதும் அடுக்கடுக்கான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான், “இப்போட்டியில் நாங்கள் டாஸை வென்ற நிலையிலும், அந்த வாய்ப்பை நாங்கள் சரியாக பயன்படுத்தவில்லை. இந்த மைதானத்தில் 280 ரன்களை எடுத்தால் அது வெற்றிக்கு வழிவகுக்கும் என்று நினைத்தோம். ஆனால் எதிரணி பந்துவீச்சாளர்களில் மிடில் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் எங்களால் எதிர்பார்த்த ஸ்கோரை அடிக்க முடியவில்லை.