
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று பவுலிங் எடுத்தார் சஞ்சு சாம்சன். முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு கேஎல் ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் இருவரும் மந்தமான துவக்கம் கொடுத்தனர். மைதானம் பந்துவீச்சிற்கு சாதகமாக அமைந்ததால் வேகமாக ரன்குவிக்க முடியாமல் திணறினர்.
கேஎல் ராகுல் 39 ரன்கள், கைல் மேயர்ஸ் 51 ரன்கள் அடித்து அவுட் ஆகினர். பின்னர் வந்த ஸ்டாய்னிஸ் 21 ரன்கள், பூரான் 29 ரன்கள் அடித்துக்கொடுக்க 20 ஓவர்கள் முடிவில் 154 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகள் இழந்திருந்தது. 155 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு துவக்கம் மிகச்சிறப்பாக அமைந்தது.
ஜெய்ஷ்வால் 44 ரன்கள், பட்லர் 40 ரன்கள் அடித்து ஸ்டாய்னிஸ் ஓவரில் ஆட்டமிழந்தனர். துரதிஷ்டவசமாக பின்னர் வந்த வீரர்கள் எவருமே பெரிதளவில் சோபிக்கவில்லை. இதனால் 20 ஓவர்களில் 155 ரன்கள் இலக்கை எட்டமுடியவில்லை. தட்டுத்தடுமாறி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே அடித்தது ராஜஸ்தான் அணி. 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.