
லாகூரில் நேற்று நடைபெற்ற நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூஸிலாந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் சதமடித்து அசத்திய ரச்சின் ரவீந்திரா 108 ரன்களையும், கேன் வில்லியம்சன் 102 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 362 ரன்களைக் குவித்தது. இதனைத்தொடர்ந்து, இமாலய இலக்கை சேஸிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி கடுமையாகப் போராடியது. எனினும், அந்த அணியால் 50 ஓவர்களில் 312 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் சதமடித்து அசத்தினார். மேற்கொண்டு ரஸ்ஸி வேண்டர் டுசென் மற்றும் டெம்பா பவுமா ஆகியோர் அரைசதம் கடந்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக தென் ஆப்பிரிக்காவின் சாம்பியன்ஸ் கோப்பை கனவும் தகர்ந்தது. இந்நிலையில் தங்களுடைய பேட்டிங்கில் ஒன்று அல்லது இரண்டு பார்ட்னர்ஷிப்கள் மட்டுமே சிறப்பாக இருந்தது என தென் அப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.