
ஐபிஎல் தொடரில் நேற்று நடபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை 168 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 45 ரன்கள் எடுத்தார். மும்பை அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஜெரால்ட் கோட்ஸி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் 169 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷான் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அறிமுக வீரர் நமன் திர் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 43 ரன்களில் நடையை கட்டினார். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணி 12.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்திருந்தது.
ஆனால் அதன்பின் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட டெவால்ட் பிரீவிஸ், திலக் வர்மா, டிம் டேவிட், ஹர்திக் பாண்டியா என அடுத்தடுத்து சீரான இடைவேளையில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் மூலமாக கடந்த 12 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தோல்வி அடைந்த முதல் அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.