டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 20ஆவது போட்டியில் அயர்லாந்து அணியும், இங்கிலாந்து அணியும் மோதின. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 19.2 ஓவரில் 157 ரன்கள் எடுத்த போது ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக பல்பெர்னே 62 ரன்களும், டக்கர் 34 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக மார்க் வுட் மற்றும் லிவிங்ஸ்டன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன்பின் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி இங்கிலாந்து அணி, களமிறங்குவதற்கு முன்பே மழை குறுக்கிட்டது. மழை சிறிது நேரத்தில் நின்றபின் போட்டி மீண்டும் தொடங்கியது. ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் போன்ற வீரர்கள் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினர். இதன்பின் வந்த டேவிட் மாலன் 34 ரன்களும், அதிரடியாக ஆடிய மொய்ன் அலி 12 பந்துகளில் 24 ரன்களும் எடுத்ததன் மூலம் 14.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 105 ரன்கள் எடுத்திருந்த போது மழை மீண்டும் குறுக்கிட்டதால் போட்டி அத்துடன் முடித்து கொள்ளப்பட்டது.