
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் இதில் கலந்து கொள்கின்றன.
இம்முறை பாகிஸ்தான் அணி தொடரை நடத்துகிறது. ஆனால் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்தது. இதைத் தொடர்ந்து ஹைபிரிட் மாடலில் தொடரை நடத்தும் திட்டம் முன்வைக்கப்பட்டது. இதை ஜெய் ஷா தலைமையிலான ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி இந்திய அணி பங்கேற்காத 4 ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெறும். மீதம் உள்ள 9 ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்படும். இதில் பங்கேற்றுள்ள 6 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் ஒரே பிரிவில் உள்ளன. மற்றொரு பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் தலா இரு அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். இந்த சுற்றில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். பாகிஸ்தானில் லாகூரிலும், இலங்கையில் கண்டி மற்றும் பல்லேகலேவிலும் போட்டிகள் நடைபெறுகின்றன.