பேட்டிங்கில் நாங்கள் 10-15 ரன்கள் குறைவாக இருந்தோம் - அக்ஸர் படேல்!
இந்த தோல்வி குறித்து அதிகம் யோசிக்காமல் அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் அக்ஸர் படேல் 39 ரன்களையும், அஷுதோஷ் சர்மா 37 ரன்களையும், கருண் நாயர் 31 ரன்களையும் சேர்த்து அசத்தினர். குஜராத் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிரஷித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Also Read
பின்னர் இலக்கை நோக்கி விலையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஷுப்மன் கில் 7, சாய் சுதர்ஷன் 36, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 43 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஸ் பட்லர் 11 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 97 ரன்களையும், ராகுல் திவேத்தியா 11 ரன்களையும் சேர்க்க குஜராத் டைட்டன்ஸ் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய டெல்லி அணி கேப்டன் அக்ஸர் படேல், “இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நாங்கள் 10-15 ரன்கள் குறைவாக இருந்தோம். ஏனெனில் நாங்கள் வேகத்தை அதிகரிக்க முயன்றபோது, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தோம். அதன் காரணமாக எங்களால் நாங்கள் விரும்பியபடி இன்னிங்ஸை முடிக்க முடியவில்லை.
Also Read: Funding To Save Test Cricket
இருப்பினும் இப்போட்டியில் நாங்கள் நன்றாக பந்து வீசினோம். இன்னும் சில வாய்ப்புகளை உருவாக்க முடிந்திருந்தால், விஷயங்கள் இன்னும் நெருக்கமாக இருந்திருக்கும். அதனால் இந்த தோல்வி குறித்து அதிகம் யோசிக்காமல் அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அடுத்ததாக ஏப்ரல் 22ஆம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now