
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 10ஆம் தேதி ஹைதராபாத் நகரில் நடைபெற்ற 8வது லீக் போட்டியில் இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பாகிஸ்தான் தங்களுடைய 2ஆவது வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 50 ஓவர்களில் 344/9 ரன்கள் குவித்து அசத்தியது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக குஷால் மெண்டிஸ் அதிரடியாக சதமடித்து 122 ரன்களும், சமரவிக்கிரமா சதமடித்து 108 ரன்களும் விளாசி உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக உலக சாதனை படைக்க உதவினார்கள். சுமாராக செயல்பட்ட பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹசான் அலி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதை தொடர்ந்து 345 என்ற கடினமான இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு இமாம்-உல்-ஹக் 12, பாபர் அசாம் 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
அதனால் 37/2 என ஆரம்பத்திலேயே சரிந்த பாகிஸ்தான் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்ட போது மறுபுறம் நங்கூரமாக நின்று சவாலை கொடுத்த தொடக்க வீரர் அப்துல்லா ஷபிக் 37 ஓவர்கள் வரை நிலைத்து நின்று சதமடித்து 10 பவுண்டரி 3 சிக்ஸருடன் 113 ரன்கள் குவித்தார். இடையே சௌத் ஷாக்கீல் 31 ரன்கள் குவித்து அவுட்டானாலும் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய முகமது ரிஸ்வான் சதமடித்து 131 ரன்களும் எடுத்தனர்.