
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடந்து அசத்தினார். இப்போட்டியில் அவர் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 44 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களைச் சேர்த்தது.
பின்னர் கடின இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் கேஎல் ராகுல் 35 ரன்னிலும், டூ பிளெசிஸ் 23 ரன்னிலும், செதிகுல்லா அடல் 22 ரன்னிலும், கருண் நாயர் 44 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதிவரை களத்தில் இருந்த சமீர் ரிஸ்வி 3 பவுண்டரி 5 சிக்ஸர்கள் என 58 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.