
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய ஏ மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும், ஒரு அதிகாரப்பூர்மற்ற டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது முடிவடைந்துள்ளது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் ஏ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக மேடலின் பென்னா 39 ரன்களையும், அலிஸா ஹீலி 27 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ராதா யாதவ் மற்றும் பிரேமா ராவத் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய ஏ அணியில் ஷஃபாலி வர்மா 41 ரன்களையும், மின்னு மணி 30 ரன்களையும், ராகவி பிஸ்ட் 25 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்கத் தவறினர். இதனால் இந்திய ஏ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் சியன்னா ஜிஞ்சர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது.