
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருந்த ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தின. அதேசமயம் குரூப் பி பிரிவில் எந்த இரு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன.
அந்தவகையில் இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு டேனியல் வையட் மற்றும் மையா பௌச்சர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 16 ரன்களை எடுத்திருந்த நிலையில் டேனியல் வையட் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அலிஸ் கேப்ஸியும் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார்.
அவர்களைத் தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீராங்கனை மையா பௌச்சரும் 14 ரன்களுடன் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த் நாட் ஸ்கைவர் பிரண்ட் மற்றும் கேப்டன் ஹீதர் நைட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹீதர் நைட் 21 ரன்களை எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகளும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.