
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது டிரினிடாட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியானது டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பேட்ரிக் க்ரூகர் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 174 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 76 ரன்களையும், பேட்ரிக் க்ரூகர் 44 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் மேத்யூ ஃபோர்ட் 3 விக்கெட்டுகளையும், ஷமார் ஜோசப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் அலிக் அதானாஸ் 40 ரன்களிலும், அரைசதம் கடந்து அசத்திய ஷாய் ஹோப் 51 ரன்களையும் சேர்த்து நிலையில் விக்கெட்டை இழந்துனர்.
அதேசமயம் மறுபக்கம் அபாரமாக விளையாடி அரைசதம் கடந்த நிக்கோலஸ் பூரன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் 65 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 17.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.