
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. அந்தவகையில் நேற்று நடைபெற்ற 12ஆவது பயிற்சி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷாய் ஹோப் 14 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசி அசத்தினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நிக்கோலஸ் பூரன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார்.
அதன்பின் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் 25 பந்துகளில் 5 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 75 ரன்களைச் சேர்த்த நிலையில் நிக்கோலஸ் பூரன் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஜான்சன் சார்லஸும் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ரோவ்மன் பாவேல் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.