
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஸ்காட்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு சஸ்கியா ஹார்லே - சாரா பிரைஸ் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் சாரா பிரைஸ் 2 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 11 ரன்களை எடுத்திருந்த நிலையில் சஸ்கியா ஹார்லேவும் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் கேத்ரீன் பிரைஸ் மற்றும் ஐல்சா லிஸ்டர் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
பின்னர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேத்ரீன் பிரைஸ் 25 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஐல்சா லிஸ்டர் 26 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளில் லோர்னா ஜேக் 11 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டார்சி கார்ட்டர் 14 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ஸ்காட்லாந்து மகளிர் அணியானது 20 ஓவர்கள் 8 விக்கெட் இழப்பிற்கு முடிவில் 99 ரன்களை மட்டுமே சேர்த்தது. விண்டீஸ் அணி தரப்பில் அஃபி ஃபிளெட்சர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.