
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று முன் தினம் பார்படாஸில் நடைபெற்றது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.
இந்நிலையில் இப்போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப் மற்றும் கேப்டன் ஷாய் ஹோப் ஆகியோர் வார்த்தை மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்படி இன்னிங்ஸின் 4ஆவது ஓவரை அல்ஸாரி ஜோசப் வீச அதனை இங்கிலாந்து வீரர் ஜோர்டன் காக்ஸ் எதிர்கொண்டார். அப்போது அந்த ஓவரில் அல்ஸாரி ஜோசப் ஃபீல்டர்களை மாற்றும் படி கேப்டன் ஷாய் ஹோப்புடன் பரிந்துரைத்தார்.
ஆனால் அதற்னை ஏற்க மறுத்த ஷாய் ஹோப் அதே ஃபீல்டை வைத்தே பந்துவீசும் படி கூறினார். இதனால் அதிருப்தியடைந்த அல்ஸாரி ஜோசப் வசை பாடிய படியே, அடுத்த பந்தை வீசியதுடன் அதில் ஜோர்டன் காக்ஸின் விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார். இருப்பினும் அந்த ஓவர் முடிந்த கையோடு அல்ஸாரி ஜோசப் யாரிடமும் ஏதும் சொல்லாமல் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் விண்டீஸ் அணி அடுத்த ஓவரில் 10 வீரர்களை மட்டுமே கொண்டு ஃபீல்டிங் செய்தது.